ஆன்மா

ஆன்மா

https://www.youtube.com/results?search_query=%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE  

ஆன்மாவை அறிதல், ஆன்மாவை அடைதல், ஆன்ம அனுபூதி என்றெல்லாம் சொல்வதன் பொருள் என்ன என்பதை இந்த மந்திரம் விளக்குகிறது.

ப்ரதிபோதவிதிதம் மதமம்ருதத்வம் ஹி விந்ததே I

ஆத்மனா விந்ததே வீர்யம் வித்யயா விந்தேம்ருதம் II 4 II

பொருள்: உணர்வின் ஒவ்வொரு நிலையிலும் ஆன்மாவை அறிபவனே உண்மையில் அறிகிறான் என்பது கருத்து. அப்படி அறிந்தவன் நிச்சயமாக மரணமிலாப் பெருநிலையை அடைகிறான். ஆன்மாவிலிருந்து ஆற்றல் கிடைக்கிறது. ஞானத்தால் மரணமிலாப் பெருநிலை அறியப்படுகிறது.

உடம்பு, மனம், ஆன்மா என்று பலவற்றால் அமைந்த தொகுதி மனிதன். ஆன்மா மட்டுமே உணர்வுப் பொருள்; மற்ற அனைத்தும் உணர்வற்றவை. தீக்குள் இடப்பட்ட இரும்பு தீ போலவே ஜொலிக்கிறது. அந்த இரும்பின் ஒளியும் சூடும் உண்மையில் அதற்கு உரியவை அல்ல. தீயின் தொடர்பால், இரும்பு தீ போல தெரிகிறது. அதுபோலவே ஆன்மா என்ற உணர்வுப் பொருளின் தொடர்பால் உடம்பு, மனம் போன்றவை உணர்வுப் பொருள் போலத் தோன்றுகின்றன.

உணர்வின் ஒவ்வொரு நிலையிலும் ஆன்ம உணர்வு உணரப்பட வேண்டும் என்கிறது மந்திரம். அதாவது உடம்பின் ஒவ்வொரு செயல்பாட்டிலும், மனத்தின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஆன்ம உணர்வு வெளிப்படுவதை உணர வேண்டும். அவ்வாறு வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஆன்ம உணர்வு வெளிப்படுவதை உணர்பவனே உண்மையில் ஆன்மாவை அறிகிறான்.

இந்த ஆன்ம உணர்வு ஆற்றலைத் தருகிறது. இது உண்மையான ஆற்றல்.  ஆற்றல், வல்லமை, சக்தி என்று நாம் பொதுவாகக் கருதுவது உண்மையில் ஆற்றல் அல்ல. நம்மைப் பலசாலி ஆக்கிக்கொள்வதற்காக நாம் செய்கின்ற ஒவ்வொரு முயற்சியும் பயம் காரணமாக செய்யப்படுபவை.

நம்மிடம் இருப்பதை இழந்து விடுவோமோ என்ற பயம், எதிரி தாக்கி விடுவானோ என்ற பயம், மரண பயம் என்று எத்தனையோ பயங்களிலிருந்து விடுபடுவதற்காக நாம் வலிமையை வளர்க்கிறோம். ஆனால் இந்த வலிமை வளர வளர நமது பாதுகாப்பின்மை உணர்வும் பயமும் அதே விகிதத்தில் வளர்கின்றன. பணக்காரன் தனது செல்வத்தைப் பாதுகாப்பதற்காகச் செய்கின்ற முயற்சிகள் வளரவளர அவனது பயமும் வளர்வது நாம் கண்கூடாகக் காண்கின்ற ஒன்று. எனவே இந்த ஆற்றல் உண்மையான ஆற்றல் அல்ல.

ஆன்ம அனுபூதியால் பெறுகின்ற ஆற்றல் உண்மையான ஆற்றல். ஆன்மாவை உணர்கின்ற ஒருவன் தன்னை அழிக்க உலகின் எந்த சக்தியாலும் இயலாது என்பதை உணர்கிறான். அவனை ஆயுதங்கள் வெட்டாது , தீ எரிக்காது, தண்ணீர் நனைக்காது, காற்று உலர்த்தாது. நான் எங்கும் நிறைந்தவன், என்றென்றும் இருப்பவன், நிலையானவன் என்பதை அவன் உணர்கிறான் என்றே நமது சாஸ்திரங்களும் கூறுகின்றன. இந்த அறிவு அவனுக்கு எல்லையற்ற ஆற்றலைத் தருகிறது. தான் என்றென்றும் இருப்பவன், அழிவற்றவன் என்பதை உணர்கின்ற அவன் மரணமிலாப் பெருநிலையை அடைகிறான்.

Comments

Popular posts from this blog

60 names of years

கந்த சஷ்டி விரதம்